Home நாடு பக்காத்தானுடனான கூட்டணியை பாஸ் முறித்துக் கொள்ளும்: அரசியல் ஆய்வாளர் கருத்து

பக்காத்தானுடனான கூட்டணியை பாஸ் முறித்துக் கொள்ளும்: அரசியல் ஆய்வாளர் கருத்து

660
0
SHARE
Ad

கோத்தாபாரு, மே 31 – இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்விதான் மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாகியிருக்கும் செய்தி. பாஸ்-ஜசெக அரசியல் உறவு முறிவைத் தொடர்ந்து பாஸ் எப்போது பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணியிலிருந்து வெளியேறும் என்ற விவகாரத்தை வைத்துத்தான் மேற்குறிப்பிட்ட அந்தக் கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது.

Kamarul-Zaman-Yusoff Pol Analystபக்காத்தானுடனான கூட்டணியை பாஸ் கட்சி முறித்துக் கொள்வது உறுதி என பிரபல அரசியல் ஆய்வாளர் டாக்டர் கமருல் சமான் யூசோஃப் அண்மையில் தெரிவித்துள்ளார்.

உட்கட்சித் தேர்தலுக்குப் பின்னர் பாஸ் கட்சியின் தலைமைத்துவம் மாறினாலும் இந்நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நடைபெற உள்ள பாஸ் கட்சித் தேர்தலில் எத்தரப்பு வெற்றி பெற்றாலும் அக்கட்சி இரண்டாக பிளவுபடும் என்று யூசோஃப் மேலும் கணித்துள்ளார்.

“நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை அவரை எதிர்த்துப் போட்டியிடும் அகமட் அவாங் வெற்றி கொள்வதாக கருதுவோம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் ஹாடி அவாங் தனது ஆதரவாளர்களுடன் பாஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதிய இஸ்லாமிய கட்சியை தொடங்குவார். மேலும் ஷரியா சட்டங்களையும் வலியுறுத்துவார். இதனால் பக்காத்தானின் பலம் குறையும். ஒருவேளை ஹாடி அவாங் வெற்றி பெற்றார் எனில், அகமட் அவாங் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி புதிய கட்சியைத் தொடங்குவார். அப்புதிய இஸ்லாமிய கட்சி ஷரியா சட்டங்கள் அல்லாத நல்ல ஆட்சி முறையை வலியுறுத்தும். இந்த அணுகுமுறையில் ஐசெகவுக்கும் பிகேஆருக்கும் உடன்பாடு இருக்கலாம்”.

PAS-Logo-Slider“உட்கட்சித் தேர்தலில் அகமட் அவாங் தரப்பினர் முக்கிய பதவிகளை கைப்பற்றினாலும் பக்காத்தானுக்கு அதனால் லாபம் இல்லை. ஏனெனில் ஹூடுட் எனும் ‘முள்’ ஐசெக மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் சதையில் குத்தியிருக்கும் வரை இந்நிலையே நீடிக்கும். எனவே பாஸ் கட்சியில் உள்ள முற்போக்கு அணியினர் தோல்வி கண்டு, அதன் காரணமாக அவர்கள் பக்காத்தான் அரசியல் அமைப்பு சட்டங்களை ஒத்த சட்டங்களுடன் புதிய கட்சி தொடங்குவதை ஐசெகவும் பிகேஆரும் உறுதி செய்வதுதான் நல்லது,” என்று டாக்டர் கமருல் சமான் யூசோஃப் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாஸ் தானாக பக்காத்தானிலிருந்து வெளியேறாது என்ற ஆரூடமும் நிலவுகின்றது. அப்படி வெளியேறினால் மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் மதிப்பும் ஆதரவும் குறைந்து விடும் என பாஸ் தலைமைத்துவம் அஞ்சுவது தெளிவாகத் தெரிகின்றது. அதனால்தான் இன்னும் மக்கள் கூட்டணியில் நீடிக்கின்றோம் என ஹாடி அவாங் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். மக்கள் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்துகின்றார்.

அப்படியே பாஸ் கட்சி மக்கள் கூட்டணியிலிருந்து  வெளியேறினாலும், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் தேசிய முன்னணிக்கு எதிராக ஒரே பொது எதிர்க்கட்சி வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்ணியமாகப் பின்பற்றினால், கிளந்தான், திரெங்கானு மாநிலங்களிலும், கிழக்குப் பகுதிகளிலும் பாஸ் மீண்டும் கணிசமான தொகுதிகளை வென்றெடுக்கும் என்பதும் ஒருசில அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பாக இருக்கின்றது.