சிங்கப்பூர், ஜூன் 1 – சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாகத் தான் பாதிக்கப்படவில்லை என தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
தடுப்பரண்களை மீறிச் சென்ற சிவப்பு நிறக் கார் பரிசோதிக்கப்படுகின்றது
அங்குள்ள ஷாங்ரி லா தங்கு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த மாநாடு நடைபெற்றது. விடுதிக்கு மிக அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
“எல்லாம் சரியாக, அமைதியாக உள்ளது. கடவுளுக்கு நன்றி,” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் இந்த 3 நாள் மாநாட்டில் 26 நாடுகளைச் சேர்ந்த தற்காப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் உலகம் முழுவதிலும் இருந்து தற்காப்புத் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஊடவியலாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி குறிப்பிட்ட தங்குவிடுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.36 மணிக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் காவல்துறையால் அப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வாகனப் பரிசோதனையின்போது காரில் வந்த 3 ஆடவர்கள் ஒத்துழைக்க மறுத்ததாகவும், தொடர் எச்சரிக்கைகளை மீறி கார் ஓட்டுநர் தடுப்பரண்களை மீறி வேகமாக செல்ல முயற்சித்ததாகவும் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட 3 ஆடவர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்துள்ளனர். கைதான இருவரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே மூவரும் வந்த காரிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
படங்கள்: EPA