வாஷிங்டன், மே 31 – அமெரிக்காவிற்கும், கியூபாவிற்கும் இடையே நடைபெற்ற பனிப்போர்களும், அதனால் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட உறவு பாதிப்புகளும் உலகம் அறிந்த ஒன்று. இதனால் பல வருடங்களாக இரு நாடுகளுக்கும் தூதரக உறவுகள் இல்லாமல் இருந்து வந்தன. அதுமட்டுமல்லாமல், கியூபா கொரில்லா அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வந்ததால் அந்நாட்டை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரவாத நாடாக பிரகடனப்படுத்தியது.
இந்நிலையில், அதே அமெரிக்கா கியூபா தீவிரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் உறவு துளிர்க்க ஆரம்பித்தது தான். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு தயாராகின.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவர், கியூபாவை தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக 45 நாள் மறு ஆய்வுக்காலம் ஒன்றையும் அறிவித்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த ஆய்வின் முடிவில் தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம் கியூபா மீது மேற்கத்திய நாடுகள் விதித்து இருந்த பொருளாதார தடைகள் உட்பட பல்வேறு தடைகள் நீங்கின.