சென்னை, ஜூன் 1 – தமிழகத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சாதாரண நலம் விசாரிப்பு சந்திப்புகள் கூட – திருமண அழைப்பு விடுக்கும் சந்திப்புகள்கூட – மிகுந்த முக்கியத்துவம் பெற்று விடுகின்றன.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு திருமாவளவனும், விஜய்காந்தும் திடீரென சந்தித்துப் பேசினர். இருவருக்கும் இடையேயான சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் நீடித்தது.
இவர்களுக்கிடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இச்சந்திப்பு குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ”வருகின்ற ஜூன் 9 ஆம் தேதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. அந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவர் நாளை தனது பதிலை தெரிவிப்பதாக கூறினார். இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் வரவேண்டும்.”
“ஒரு கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தால்கூட அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும். உத்தரப் பிரதேசம் இதற்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மத்திய அரசில் 40 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. ஜனதா கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முறையே தொடர்ந்து வருகிறது.”
தங்களின் சந்திப்பு குறித்து மேலும் விவரித்த திருமாவளவன், “கடந்த மாதம் விஜயகாந்த் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தது குறித்தும், ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது மற்றும் ஐ.ஐ.டி. மாணவர் பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்தும் பேசினோம்”என்றார்.
இதற்கிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் தான் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.