சிங்கப்பூர், ஜூன் 1 – சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை (மே 30) தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டை சிங்கை சிம் பல்கலைக்கழகத்தில் சிங்கை பிரதமர் துறையின், இரண்டாம் அமைச்சரும், உள்துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் (படம்) அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது.
இதனிடையே, மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று மலேசியா இளம் குறுஞ்செயலி மேம்பாட்டாளர்களாகிய துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மற்றும் பாகான் பாசீர் மாணவர்கள், ‘தமிழ் அறிவு குறுஞ்செயலியும் தமிழ்மொழி கற்றலும்’ எனும் தலைப்பில் கட்டுரை படைத்து அரங்கில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
அதனையடுத்து, மலேசியா கல்வியமைச்சின் கல்வியியல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியான தனேஷ் பாலகிருஷ்ணன், ‘நீலாய் ஆசிரியர் நடவடிக்கை மையத்தில் தமிழ் குறுஞ்செயலி’ எனும் தலைப்பில் அடிப்படை கண்னி அறிவைக் கொண்டு எவ்வாறு மாணவர்களும் ஆசிரியர்களும் உருவாக்கலாம் என விவரித்துக் கூறினார்.
அடுத்தது, சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம் முதுகலைப் பட்ட ஆய்வாளராகிய ஜெ. மேகவர்ணன் “ஆரம்பப்பள்ளிகளுக்கான HTML5 வழி குறுஞ்செயலி கட்டுமான கற்பித்தல் எனும் கட்டுரை படைத்தார்.
இறுதியாக, மலேசியா கல்வித்திட்டன் கீழ் இயங்கும் மெய்நிகர் கற்றல் சூழல் (VLE Frog) வழி தமிழில் ‘கற்றலும் கற்பித்தலும்’ எனும் தலைப்பில் மலேசியா புத்தாக்கச் சிந்தனை ஆசிரியர் சேனாதி ராஜா இளஞ்சேரன் தன் கட்டுரை படைத்தார்.
இம்மாநாட்டில் மலேசியா சார்பில் 50 பேராளர்கள் கலந்து கொண்டு கட்டுரை படைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மாநாட்டுத் தகவல்கள் , படங்கள் உதவி : மலேசியப் பேராளர் தனேஷ் பாலகிருஷ்ணன்