டாக்கா, ஜூன் 1 – பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை பெற முக்கிய பங்கு வகித்ததற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு விருது வழங்கி கவுரவிக்க வங்காளதேசம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 1971-ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப்போர் துவங்கிய காலகட்டத்தில், அப்போது பாரதீய ஜனசங்கத்தின் உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வாஜ்பாய்,
வங்காளதேசத்துக்கு ஆதரவாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் வங்காளதேச மக்களின் உரிமைகளை எடுத்துச்சென்று பிரச்சாரம் செய்தார்.
இதன்காரணமாக வாஜ்பாயை பாராட்டி அவருக்கு வங்காளதேசம் விருது அறிவித்துள்ளது. ‘‘வங்காளதேச நண்பர்கள் விடுதலை போராட்ட விருது’’ என்ற பெயரிலான அந்த விருதை தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்படும் வாஜ்பாய் நேரில் சென்று பெற முடியாதது என்பதால்,
வரும் 6–ஆம் தேதி வங்காளதேசம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த விருது நேரில் வழங்கப்படுகிறது ஏற்கனவே முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த 2012–ஆம் ஆண்டு நேரில் சென்று பெற்றார்.
வங்காளதேச சுதந்திர போரின் போது, உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கவும் முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, கடிதமும் வீரர்களின் பங்களிப்புக்காக இரங்கல் தெரிவித்து வங்காளதேச பிரதமர் கையெழுத்திட்ட சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.