சென்னை, ஜூன் 1 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர் பலர் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், “நீதியை நிலை நாட்ட யார் முன்வந்தாலும் அதை திமுக வரவேற்கும்” என்று தெரிவித்துள்ளார். ஸ்டாலினும் இதே கருத்தினை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், இந்த வழக்கு உருவாகக் காரணமாக இருந்தவருமான சுப்ரமணியம் சாமி இது தொடர்பாக கூறுகையில், “பல்வேறு நெருக்கடிகளை மீறி கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் நான் ஜெயலலிதாவிற்கு எதிராக வாதம் செய்வேன். எனக்கு அதிகாரம் உண்டு. இந்த வழக்கின் முடிவில் ஜெயலலிதா தோல்வி அடைவார். அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல வேண்டியது வரும்” என்று தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் இது தொடர்பாக கூறியதாவது:-
“மேல் முறையீடு மூலம் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வரும். கர்நாடாக அரசின் இந்த முடிவு தாமதமானது என்றாலும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாமல் மதிமுக தலைவர் வைகோ, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் இந்த முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.