தென்ஆப்பிரிக்கா, ஜூன் 2 – தென்ஆப்பிரிக்காவில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்தில், சிங்கத்தின் பிடியில் சிக்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்தார்.
ஜோகனஸ் பெர்க்கில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் சுதந்திரமாகத் திரியும் சிங்கங்களைப் பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
நேற்று பூங்காவுக்கு சென்ற அமெரிக்கப் பெண் ஒருவர், கார் கண்ணாடியை திறந்தபடி, சிங்கங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், சிங்கம் ஒன்று ஜன்னல் வழியாக காருக்குள் புகுந்தது.
சிங்கத்தின் பிடியில் சிக்கியதும், அவரது அலறல் சத்தம் கேட்டு பூங்கா பராமரிப்பாளர் சிங்கத்தை உடனடியாக விரட்டினார். எனினும், சிங்கம் தாக்கியதில் பலத்த காயமடைந்த அமெரிக்க சுற்றுலா பயணி உயிரிழந்தார்.
அவரது கார் ஓட்டுநருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரின் ஜன்னல்களை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்திய போதும், அவர் அதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டதால்தான் தாக்குதலுக்கு ஆளானதாக பூங்கா நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.