கொழும்பு, ஜூன் 4 – ராஜபக்சே இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்ததாகவும், தன்னையும் கொலை செய்ய முயற்சித்தாகவும் சிறிசேனா கூறியுள்ளதாக ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள், முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திப்பிற்குப் பின் சிறிசேனா இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள சிறிசேனா,
“மக்கள் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டு ஆத்திரமுற்றிருக்கும் ராஜபக்சேவை பிரதமராக்கினால், அவர் அதிபராக பதவி வகிப்பதற்கு அரசியல் சாசனமோ அல்லது நீதியோ அவசியமில்லை
அதிபராவதற்கு தேவை என்மீது ஒர் துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே என்பதனை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். ராஜபக்சேவை பிரதமராகினால், நான் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தில், இந்த நாட்டு மக்கைளயும் கொன்று, நாடு திரும்பும்போது என்னையும் கொன்று அவர் அதிபராகிவிடுவார்” என்று தெரிவித்தார்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ‘உங்களைக் கொலை செய்வார் என நீங்கள் எவ்வாறு உறுதியாகக் கூறுகின்றீர்கள்’ என அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அவர், ‘மகிந்த ராஜபக்சே இடைத்தேர்தலின் போது துப்பாக்கியால் ஒருவரை சுட்டார். அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்”.
“நான் அப்போது சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சற்றே தொலைவில் இருந்தேன். இவர் கொலை செய்த விதம் தெரிந்த காரணத்தினால்தான் நான் அவ்வாறு கூறுகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார் சிறிசேனா.