சென்னை, ஜூன் 4 – தனுஷ் தயாரிப்பில் இரண்டு தேசிய விருதுகளை வென்ற ‘காக்கா முட்டை’ படம் நாளை உலக முழுவதும் 1300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக உள்ளது. இப்படம் உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.
இப்படத்திற்கு மேலும், பெருமை சேர்க்கும் விதமாக, இப்படம், இத்தாலி நாட்டில் மிலன் நகரில் நடைபெற உள்ள 25-வது ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க திரைப்பட விழாவில் சிறந்த உள்நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலித்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது.
இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இப்படத்தை மணிகண்டன் என்பவர் இயக்கியிருக்கிறார். தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘பாக்ஸ் ஸ்டார்’ நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோ மல்லூரி, சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சென்னை குடிசைப் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள், மேல்தட்டு மக்கள் மட்டுமே உண்ணும் உணவாக கருதக்கூடிய பீட்சாவை வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள்.
அதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ள படம்தான் ‘காக்கா முட்டை’.
இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. மேலும், இப்படம் மலேசியா, சிங்கப்பூரில் இன்று இரவு 9.00 மணிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.