கோலாலம்பூர், ஜூன் 5 – கோலாலம்பூர் மருத்துவமனையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நேற்று வியாழக்கிழமை காலை என்டோஸ்கோபி பரிசோதனை நடைபெற்றது.
அதன் முடிவில் அவரது சிறுநீரகத்தில் சிறிய அளவிலான சதை வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது மகள் நூருல் நூகா அன்வார் நேற்று இரவு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“சிறியதாக இருப்பதால் அது ஒரு கேன்சர் கட்டி இல்லை என்று நம்புகின்றேன்” என்றும் நூருல் நூகா குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடந்த இந்தப் பரிசோதனையின் போது அன்வாரின் மனைவி டத்தோஸ்ரீ வான் அசிசாவும் மருத்துவமனையில் உடனிருக்க அனுமதிக்கப்பட்டார்.
“அவரது (அன்வார்) மனைவி என்ற முறையில் பரிசோதனையின்போது உடனிருக்க அனுமதி கோரினேன். அதற்குரிய அனுமதி அளிக்கப்பட்டதை வரவேற்கிறேன்” என முகநூல் பதிவொன்றில் வான் அசிசா குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக் குறைபாடு காரணமாக பிகேஆர் ஆலோசகரான அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
ஓரினப் புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள அன்வார், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அத்தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.