புது டெல்லி, ஜூன் 5 – சுதந்திரமடைந்த இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, 1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போர் வெற்றிக்கு பிறகு இரு நாடுகளுக்கான முக்கிய அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யா சென்றிருந்தார். அங்கு அவர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்று கூறப்பட்டது. அந்த சமயத்தில் அவரின் மரணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும், அப்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு அதனை பெரிது படுத்தாமல் மூடி மறைத்தது. இந்நிலையில், நேதாஜி போல் சாஸ்திரியும் காங்கிரஸ் நிர்பந்தத்தால் ரஷ்யாவில் கொல்லப்பட்டார் என்று புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.
நேதாஜி மரணமும் சுப்ரமணியம் சாமியின் பகீர் அறிக்கையும்:
கடந்த சில மாதங்களாக நேதாஜியின் மரணம் குறித்து இந்தியாவில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சாமி, நேருவின் நிர்பந்தம் காரணமாக வஞ்சனையாக நேதாஜி ரஷ்யாவில் கொல்லப்பட்டார் என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். சுப்ரமணியம் சாமியின் இந்த குற்றச்சாட்டை இதுவரை காங்கிரஸ் மறுத்து எவ்வித அறிக்கையும் வெளியிடாத நிலையில் சாஸ்திரியின் சந்தேக மரணத்திலும் திரை மறைவில் காங்கிரஸ் உள்ளது என்ற புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ரஷ்யாவில் இரு நாடுகளின் ஒப்பந்தம்:
1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா பாகிஸ்தானை வெற்றி கண்டது. போருக்குப் பின் இரு நாடுகளுக்கும் இணக்கமான சூழலை உருவாக்க ரஷ்யா இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாட்டு தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், கையெழுத்திட்ட அடுத்த சில மணி நேரங்களில் சாஸ்திரி மர்மமான முறையில் ரஷ்யாவில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்தார் என்று அப்போது பிரகடனப்படுத்தப்பட்டது.
சாஸ்திரியின் உடலில் காயங்கள்:
சாஸ்திரி இயற்கையாக இறக்கவில்லை, அவர் உடலில் நீல நிறத்தில் இரண்டு கடிவாய்கள் இருந்தாகவும், அடிவயிற்றில் கத்தி காயம் இருந்ததாகவும் சாஸ்திரியின் மகன் சுனில் சாஸ்திரி தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வௌியாகி உள்ளன. எனினும் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் உலா வருகின்றன.
இதற்கிடையே இந்தியா, 1965-ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை வெற்றி கண்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், இந்தியப் பிரதமர் மோடி அதனை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதில் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சாஸ்திரிக்கு மரியாதை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் சாஸ்திரியின் மரணம் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சர்ச்சைகள் ஒரு புறம் வெடித்தாலும் நேதாஜி விவகாரத்திலும், சாஸ்திரி விவகாரத்திலும் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் வாய்திறக்க மறுத்து வருவது சந்தேகத்தை நியாயப்படுத்துகிறது.