பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 – இந்தியாவில் மேகி நூடுல்ஸ் கலப்படம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மலேசியாவில் பிரபலமாக விற்பனையாகி வரும் அந்த பொருளை மீட்டுக்கொள்ளப் போவதில்லை என நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இது குறித்து நெஸ்லே மலேசியா நிறுவனத்தின் பிரதிநிதி மேக்சின் லிம் கூறுகையில், “எல்லா மேகி நூடுல் பொருட்களும் சாப்பிடுவதற்கு உகந்தது தான். அதனால் மலேசியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல் பொருட்கள் திரும்பப் பெற மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மலேசியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸ் உள்நாட்டு மற்றும் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றது. கடுமையான உணவு பாதுகாப்பு சட்டங்களைப் பின்பற்றி, அதன் தரத்தை கட்டுக்குள் வைத்து நெஸ்ட்லே தொழிற்சாலைகள் இயங்குகின்றன” என்று நெஸ்லே மலேசியா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவில் மேகி நூடுல் மிகவும் பிரபலமானது, மக்களால் விரும்பி சாப்பிடப்பட்டு வரும் உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மேகி நூடுல்ஸ்- ல் சுவைக்காக, உடல் உபாதையை ஏற்படுத்தும் அலுமினியம் அதிக அளவில் கலக்கப்படுவதாக டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் மேகி குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
அண்மைய தகவலின் படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மேகி உட்பட 4 நூடுல்ஸ்-க்கு தமிழகத்தில் தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.