மதுரை, ஜூன் 5 – மேகி நூடுல்சிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை நுகர்வோர் ஆணையம், அதன் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் அமிதாப், மாதிரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தாவுக்கு முன்னறிவிப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் மேகியின் தரம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்களான அமிதாப், மாதுரி தீட்ஷித் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கும் இந்த விவகாரத்தால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, இது தொடர்பாக பீகாரில் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் மூவரையும் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், மேகி நூடுல்சிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை நுகர்வோர் ஆணையம் இன்று விசாரித்தது.
விசாரணையின் முடிவில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு முன்னறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும், இது தொடர்பாக வரும் ஜூலை 6-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப் பட்டுள்ளது. நெஸ்லே அதிகாரிகள் ஜூன் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.