இது தொடர்பாக நெஸ்லே நிறுவனம் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் தான் எங்களுக்கு முக்கியம். அதனால் மேகி நூடுல்ஸின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம். எனினும், இந்த முடிவினால் எங்கள் உணவுப் பொருள் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என்று அர்த்தமில்லை.”
முதன் முதலில் பீகார் மாநிலத்தில் மேகி மீது தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து வரிசையாக பிற மாநிலங்களும் மேகி நூடுல்ஸின் தரத்தை சோதனை செய்ய உத்தரவிட்டன. சோதனையின் முடிவில் மேகி நூடுல்ஸ்-ல் சுவைக்காக உடல் உபாதையை ஏற்படுத்தும் அலுமினியம் அதிக அளவில் கலக்கப்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களாக மேகிக்கு தடை உத்தரவை பிறப்பிக்கத் தொடங்கின. இதற்கிடையில் மேலும் 10 மாநிலங்கள் மேகியின் தரத்தை சோதனை செய்ய மாதிரிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒவ்வொரு பொருட்களும் கடை நிலை நுகர்வோருக்கு வருவதற்கு முன்னர் இந்திய தரக் காட்டுப்பாட்டு அமைப்பின் பல்வேறு சோதனைகளை தாண்டி தான் வருகின்றன. இத்தனையும் தாண்டி மக்கள் பல வருடங்களாக அதனை உபயோகித்த பிறகு, தற்போது அதில் நச்சு பொருள் கலந்திருப்பதாக சர்ச்சையை கிளப்புகையில் அந்நிறுவனங்களின் மீதான நன்மதிப்பு கெடுவதை விட, இந்திய தரக்காட்டுப்பாட்டு அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கி உள்ளது.