இலங்கை, ஜூன்5- இந்தியப் பெருங்கடல் பகுதி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால், அனைத்துலகப் பாதுகாப்பு நோக்கில் இந்தியப் பெருங்கடல் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சில வல்லரசு நாடுகள் முனைந்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே போட்டி நிலவி வருவதைக் கண்டு இந்தியா, மொரீசியஸ், மாலத்தீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகள் கவலையடைந்துள்ளன.
அதேசமயம், இலங்கை அரசு, சீனாவிற்கு அளித்து வரும் முக்கியத்துவம் எதிர்காலத்தில் போர் மூளும் அபாயத்தை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தையும் உண்டாக்கியுள்ளன.
டீக்கோ கார்சியா:
இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு பவளப் பாறைத் தீவு டீக்கோ கார்சியா. இத்தீவை இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா வாங்கி, அதில் அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள் அமைத்து இத்தீவை ராணுவ மயமாக்கியது.
மேலும், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ இங்கு அந்நிய நாடுகளை உளவு பார்க்கும் நவீன மையத்தை அமைத்துள்ளது.
தாமரைக் கோபுரம்:
இதைக் கருத்தில் கொண்டு சீனாவும், இத்தீவிற்கு அருகேயுள்ள இலங்கையைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க ரகசிய திட்டம் தீட்டி,கொழும்பில் கடலுக்குள் ‘மெகரைன் ஸ்மார்ட் சிட்டி’ ஒன்றை அமைத்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளை ரகசியமாகக் கண்காணிக்க இத்தீவில் தாமரை வடிவிலான கோபுரம் ஒன்றையும் அமைத்து வருகிறது.
இதன் மூலம் சீனா தன் ‘கொலையாளியின் தண்டாயுதம்’ என்று அழைக்கப்படும் நவீன கன ரக ஆயுதங்களை அதில் மறைத்து வைத்து, ரகசிய கண்காணிப்பில் ஈடுபட முடியும்.
அதனால், இக்கோபுரம் அமைக்கப்படுவது இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று, தென்கிழக்கு ஆசியாவிற்கான அரசியல் பார்வையாளர் பாஸ்கர்ராய் எச்சரித்துள்ளார்.