பாங்காங் ,ஜூன் 8- இந்தியாவிலேயே பெரிய இந்துக் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலாகும். அதைவிட 3 மடங்கு பெரியது, கம்போடிய நாட்டில் 12–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர்வாட் இந்துக் கோவில். இது விஷ்ணு கோவிலாகும். 12-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட பல்லவ மன்னன் இரண்டாம் சூரியவர்மன் அங்கோர்வாட் கோவிலைக் கட்டினான்.
கோவிலைக் கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆனது. மொத்தம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாகக் கோவில் அமைந்துள்ளது. கோவில் செவ்வக வடிவில் உள்ளது. கோவிலைச் சுற்றி 4 பக்கமும் 200 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட அகழி அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அகழியைக் கடக்க பாலம் உள்ளது.
அகழியைக் கடந்ததும் கோவிலை சுற்றி பிரமாண்ட மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது 802 மீட்டர் அகலம் 1024 மீட்டர் நீலம் 4.5 மீட்டர் உயரம் கொண்டது. அதில் இருந்து 500 மீட்டர் தூரம் கடந்து சென்று கோவில் முன்பகுதியை அடைய வேண்டும். கோவிலில் 5 பிரமாண்ட கோபுரங்கள் உள்ளன. 4 கோபுரங்கள் பக்கவாட்டிலும், ஒரு கோபுரம் அதன் நடுவிலும் கட்டப்பட்டுள்ளது.
இது மற்ற கோபுரத்தை விட மிகப்பெரியதாக இருக்கிறது. இதன் உயரம் மட்டும் 213 அடி. கோவில் மட்டுமே 8 லட்சத்து 20 ஆயரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. அதாவது 203 ஏக்கர் பரப்பளவில் கோவில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகப் புராதனச் சின்னமான இந்தக் கோவிலைப் போலவே, இந்தியாவில் பீகார் மாநிலத்தில் ‘விராட் ராமாயண் மந்திர்’ என்ற தனியார் அமைப்பு கோவில் கட்ட முடிவு செய்து, தங்கள் இணையதளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்குக் கம்போடியா அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்துக் கம்போடிய வெளியுறவு துறை அமைச்சகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘விராட் ராமாயண் மந்திர்’ என்ற அமைப்பு பாட்னா அருகே 161 ஏக்கரில் 2,800 அடி உயரத்தில், 1,400 அடி அகலத்தில் பிரம்மாண்ட ராமர் கோவிலை, அங்கோர்வாட் கோவிலைப் போலவே கட்டப்பட உள்ளதாக அறிந்தோம். கம்போடியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அங்கோர்வாட் கோவிலைப் போலவே இந்தியாவில் கோவில் கட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே இதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
கி.பி. 1113 முதல் 1150-ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த இரண்டாம் சூரியவர்மன், போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் இந்தியப் பாரம்பரியத்தை-கலைநயத்தை அந்நிய மண்ணில் பதிக்கும் வகையிலும் இந்தக் கோவிலை கட்டினான்.
இந்திய மன்னன் கட்டிய கோவிலைப் போல் இந்திய மண்ணில் கட்டுவது தவறா? அதற்கு எதிர்ப்பா?இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் என்ன பதில் தெரிவிக்கப் போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.