புதுடில்லி, ஜூன்8- கிராமப்புற மக்கள் பிழைப்பு தேடிப் பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. காரணம், கிராமப்புறங்களில் வருமானம் ஈட்டுவதற்குப் போதுமான தொழிற்துறை வசதிகள் ஏதும் இல்லாததேயாகும்.
இக்காரணங்களால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வசதிகளும் கொண்ட 100 வளர்நிலை(smart) நகரங்கள் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதேபோல், 500 நகரங்களைப் புதுப்பிக்கும் ‘அம்ருத்’ என்ற திட்டத்தையும் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது.
இந்த நகரங்களின் கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதுபோல் அமையும் எனவும், இந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதற்காக மத்திய அரசு 98 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. இதில் 48 ஆயிரம் கோடி ரூபாய் வளர்நிலை நகரங்கள் கட்டுவதற்குச் செலவிடப்படும்; 50 ஆயிரம் கோடி ரூபாய் அம்ருத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.
இந்த இரண்டு திட்டங்களையும் வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி டெல்லி விஞ்ஞான பவனில் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து மத்திய நகரப்புற மேம்பாட்டு மந்திரி வெங்கையா நாயுடு:
“ஜூன் 25-ந் தேதி நகர்ப்புற வளர்ச்சியில் மிகவும் முக்கியமான நாள். அன்று வளர்நிலை நகரங்கள், அம்ருத் ஆகிய இரண்டு திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும். மத்திய அரசு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் இத்திட்டங்களை மாநில அரசுகளும், நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளும் எவ்வாறு செயல்படுத்தப் போகின்றன என்ற பெரிய சவாலும் இதில் உள்ளது” என்றார்.
ஸ்மார்ட் நகரங்களில் நகர்ப்புற மக்களின் வாழ்வியல் சூழ்நிலையை மேம்படுத்த 24 மணி நேரமும் குடிநீர், மின்சாரம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து, மருத்துவ வசதி, ஏழைகளுக்குக் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கச் செய்தல் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.
அம்ருத்தில் இவற்றுடன் கூடுதலாகக் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகப் பூங்காக்களை ஏற்படுத்துதல் மற்றும் பசுமைப் பகுதிகளை உருவாக்குதல் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் கூட்டாக இணைந்து ஸ்மார்ட் நகரங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.