புதுச்சேரி, ஜூன் 10 – தீப்பிழம்பாக மர்மப் பொருள் ஒன்று கடலுக்குள் விழுந்ததைப் பார்த்ததாக மீனவர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு வந்த போது, காரைக்கால் கடற்பகுதியில் திடீரென்று மாயமாய் மறைந்து போனது.
விமானம் மாயமானதைத் தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணி உடனடியாக முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் முகேஷ் என்பவர், வானத்தில் இருந்து தீப்பிழம்பு போல ஒரு பொருள் கடலுக்குள் விழுந்ததைப் பார்த்தேன் எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:
நேற்று முன் தினம் நான், ராமு, ராஜன் மூன்று பேரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றோம். இரவு 11 மணியளவில் நாங்கள் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள கிருமாம்பாக்கம் ஊரில் இருந்து 25 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது வானத்தில் இருந்து ஒரு மர்மப் பொருள் கடலுக்குள் தீப்பிடித்து எரிந்து விழுந்தது. முதலில் அதை நான் தான் பார்த்தேன். உடனே ராமு, ராஜனிடமும் காண்பித்தேன். அவர்களும் அதைப் பார்த்தனர்.
பின்னர் அதிகாலையில் நாங்கள் கரைக்குத் திரும்பி விட்டோம். நேற்று மதியம் ஒரு மணிக்குத் தூங்கி எழுந்ததும் தொலைக்காட்சியைப் பார்த்த போது தான் விமானம் ஒன்று அந்தப் பகுதியில் மாயமானதாகத் தெரிந்தது.
உடனே நான் கடலூர்க் காவல்துறை இன்ஸ்பெக்டரைச் சந்தித்து இது பற்றிக் கூறினேன். அவர் என்னைப் புதுச்சேரி காவல்படை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றார். அவர்களிடமும் இதைத் தெரிவித்தேன்.
இவ்வாறு மீனவர் முகேஷ் கூறினார்.
இந்தத் தகவலை அடுத்துத் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது.