சென்னை, ஜூன் 10- மேகி நூடுல்சைத் தொடர்ந்து பால், குடிநீர் , தேநீர்த்தூள், மசாலாப் பொடி உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து முடிவு தெரிவிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி தெரிவித்திருப்பது என்னவென்றால்:
மேகி நூடுல்சில் அதிகமான ரசாயனப் பொருள் கலந்திருப்பதைப் போல, மற்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களிலும் கலந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய உள்ளோம்.
அதாவது, பால் உறைகள் ( milk pocket), தண்ணீர் உறைகள் (water pocket), தேநீர்த்தூள்,காப்பித்தூள், மசாலாத்தூள், சமையல் எண்ணெய் போன்றவை தரமானவை தானா என்பதை ஆராய்ந்து பார்க்க இருக்கிறோம்.
ஒவ்வொரு உணவுப் பொருளும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன. மக்கள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.
உறைகளில் அடைக்கப்படும் எல்லாப் பொருளும் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதைப் போல் காய்கறி பழங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
காய்கறிகள் பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனப் பொருட்கள் சேர்க்கலாம். ஆனால், அவை அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
சாக்லேட்டுகளில் டால்டா அதிகமாகச் சேர்க்கப்படுவதாகப் புகார் வந்திருக்கிறது. எனவே, சாக்லேட்டுகளும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனால் எந்தப் பொருளுக்குத் தடை வருமோ என்ற கலக்கத்தில் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் உள்ளனர்.