கோலாலம்பூர், ஜூன் 10 – நகைச்சுவை நடிகர் சந்தானம் தயாரிப்பில், அவரே கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘இனிமே இப்படித்தான்’.
புதுமுக இயக்குநர் முருகானந்த் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை முதல் திரைக்கு வருகின்றது.
இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் தலைநகர் பெடரல் திரையரங்கில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், நடிகர் சந்தானம், படத்தின் கதாநாயகி அஸ்னா, விடிவி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு படம் குறித்து விளக்கமளித்தனர்.
டிஎச்ஆர் ராகா கவிமாறன் இச்செய்தியாளர் கூட்டத்தை வழிநடத்தினார்.
இச்சந்திப்பில் சந்தானம் பேசுகையில், இனிமே இப்படித்தான் திரைப்படத்தில் வழக்கமாக தனது படத்தில் இருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் போல் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகள் உள்ளது என்றும். அதே நேரத்தில், படத்தில் கிளைமாக்ஸ் அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவில் இவ்வளவு திரையரங்குகள் உள்ளன. இத்தனை ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம் என்று கூறிய சந்தானம், மலேசியாவிற்குக் கிளம்பும் முன்பாக ஆர்யா, விஷால் போன்ற நடிகர்களுடன் பேசிவிட்டு தான் வந்ததாகவும், இனி இது போன்ற நிறைய படங்களை நேரடியாகவே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும் சந்தானம் குறிப்பிட்டார்.
சிறிய நடிகராக இருந்தாலும், பெரிய நடிகராக இருந்தாலும் மலேசிய ரசிகர்கள் பாரபட்சமின்றி நேசிப்பதாகக் குறிப்பிட்ட சந்தானம், இந்த படத்திற்கு மலேசிய ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
(நடிகர் சந்தானம், கதாநாயகி அஸ்னா, விடிவி கணேஷ்)
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இனிமே இப்படித்தான் திரைப்படத்தின் இரண்டு பாடல்களும், முன்னோட்டமும் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் அஸ்னா ஆகிய மூவருடன் அங்கிருந்த ரசிகர்களுடன் படமெடுத்துக் கொண்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் பொறுமையாக புன்சிரிப்புடன் சந்தானம் படமெடுக்க அனுமதித்தார்.
ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு:-
நடிகர் சந்தானத்தை நேரில் வரவழைத்து பத்திரிக்கையாளர்களையும், ரசிகர்களையும் சந்திக்க வைத்தது நல்ல முயற்சி அதற்கு பாராட்டுகள். அதேவேளையில், இது போன்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தும் பொழுது முடிந்தவரை தனி அறையிலும், புகைப்படம் எடுப்பதற்கு நல்ல வெளிச்சமான சூழலையும் அமைத்துக் கொடுப்பது சிறந்தது.
அப்போது தான் வந்திருக்கும் பிரபலத்திடம் தேவையான கேள்விகளைக் கேட்டுப் பெற முடியும். போதிய வெளிச்சத்தில் படம் எடுக்க முடியும். பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்பதற்கு தனியாக சற்று நேரம் ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும். ரசிகர்கள் ஆர்வத்துடன் அவருடன் படமெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் பத்திரிக்கையாளர்களால் எப்படி கேள்விகளைக் கேட்க முடியும்? நல்ல படங்களை எடுக்க முடியும்? எனவே எதிர்காலத்தில் இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தும் பொழுது மேற்கூறிய விசயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.
செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்