சென்னை, ஜூன் 10- உறைகளில் அடைத்து வைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்த சர்ச்சை எழுந்தவுடன், தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் போன்ற 4 நூடுல்ஸ் வகைத் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேகி, வாய் வாய் எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டண்ட், ஸ்மித் அண்டு சிக்கன் மசாலா போன்ற உணவுப் பொருள்களைத் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்கவோ கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்துத் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அகற்றும் பணியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் எங்கேனும் நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அவ்வாறு,அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் பெட்டிகள் நூற்றுக்கணக்கானவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை உரிய நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்து எடுத்துச் செல்ல உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசிப் பகுதியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாகரன் தலைமையில் அனைத்து வகை நூடுல்ஸ் பாக்கெட்டுகளைக் கைப்பற்றி அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதுபோல்,ஒவ்வொரு மாவட்டத்திலும் நூடுல்ஸை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.