கோலாலம்பூர், ஜூன் 11 – அடுத்த 36 மணி நேரத்திற்குள் பகாங்கில் நிலநடுக்கம் ஏற்படவோ, அப்பகுதியைச் சுனாமி தாக்கவோ வாய்ப்பில்லை என நேற்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு ஆரூடத் தகவல்கள் நட்பு ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் பகாங் மக்கள் மத்தியில் அச்சம் பரவி வருவதாகத் தெரிகிறது.
“அடுத்த 36 மணி நேரத்தில் பகாங்கில் நிலநடுக்கம் ஏற்படும், அங்கு சுனாமி தாக்கும் எனச் சமூக ஊடகங்கள் வழி வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவற்றில் எதுவும் உண்மையில்லை.”
“பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். சமூக ஊடகங்களில் வலம் வரும் இத்தகைய தகவல்கள் எதையும் மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை,” என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
இத்தகைய தகவல்கள் மற்றும் வதந்திகளின் உண்மை நிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் வானிலை ஆய்வு மைய அகப்பக்கத்தில் (www.met.gov.my or m.met.gov.my) நுழைந்தோ, அல்லது அம்மையத்தின் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் உரிய தகவல்களைப் பெறலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் வானிலை மையத்தை 1800-221-1638 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.