கோலாலம்பூர், ஜூன் 11 – பினாங்கு அரசில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கக்கூடிய பாஸ் உறுப்பினர்கள் அனைவரையும் அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மசீச வலியுறுத்தி உள்ளது.
ஜசெகவுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாகப் பாஸ் அறிவித்ததையடுத்து இப்படியொரு கோரிக்கை எழுந்துள்ளது.
“பாஸ் பிரதிநிதிகள் பதவி விலகல் கடிதங்களைக் கொடுக்கும் வரை அவர் (முதல்வர்) ஏன் காத்திருக்க வேண்டும்? பாஸ் கட்சி சார்பாக அரசுப் பதவியில் உள்ள அனைவரையும் முதல்வர் மிக எளிதாகப் பதவியிலிருந்து நீக்க முடியும்,” எனப் பினாங்கு மசீச துணைத் தலைவர் டான் தெயிக் செங் கூறினார்.
பக்காத்தான் உருவாக்கத்திற்காக ஏற்பட்ட பாஸ், ஜசெகவுடனான உறவு என்பது தொடக்கம் முதலே பிரச்சினைக்குரியதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், பாஸ் கட்சியை அணுகும் நடவடிக்கைகளில் முதல்வர் லிம் வலுவிழந்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
“ஜசெகவுடனான உறவைப் பாஸ் துண்டித்துக் கொண்டதன் வழி அக்கட்சி சார்பாகப் பினாங்கில் பதவி வகிக்கும் ஆயிரம் பாஸ் உறுப்பினர்கள் பதவி இழப்பர். இதனால் மாநில அரசின் நிர்வாகம் பாதிக்கப்படும்.
“இதேபோல் வருங்காலத்தில் சிலாங்கூர் பக்காத்தான் உறவிலும் பாதிப்பு ஏற்படும். இதனால் தேர்தலில் பக்காத்தானுக்குப் பின்னடைவு ஏற்படும்,” என டான் மேலும் கூறினார்.