கவுகாத்தி, ஜூன் 12 – அசாமில் பிரம்ம புத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 2.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இமய மலையில் உருவாகும் பிரம்மபுத்திரா ஆறு, சீனா, வங்கதேசம், இந்தியாவின் அசாம் வழியே பாய்கிறது.
இந்நிலையில், ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அபாயக் கட்டத்தையும் தாண்டி வெள்ள நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஜோரத், சோனித்பூர், கம்ரூப் உள்ளிட்ட மாவட்டங்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் வரைக்கும், 81 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை நேற்று, 2.12 லட்சமாக உயர்ந்துள்ளது. பர்பேட்டா, சோனித்பூர், கோல்பரா, ஜோரட் ஆகிய மாவட்டங்களில் உள்ள, 553 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
சுமார் 8,200 ஹெக்டேர் அளவிலான விளை நிலம், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி, வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் நிவாரண முகாம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.