மும்பை , ஜூன் 12 – நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு, இந்தியாவில் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன்-12) நடைபெறவுள்ளது. “மேகி நூடுல்ஸ், மனிதப் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல. எனவே, அதை சந்தையிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் தனது மனுவில் கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெறும் என்று நீதிபதிகள் வி.எம்.கானடே, பீ.பி.கொலாபாவாலா அடங்கிய அமர்வு அறிவித்தது.
மேகி நூடுல்ஸின் ஒன்பது வகைகளும், மனிதப் பயன்பாட்டுக்கு உகந்தவையல்ல என்பதால் அவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த வாரம் உத்தரவிட்டது.
மேலும், மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மோனோ சோடியம் குளூட்டாமேட் என்னும் வேதிப் பொருளும், காரீயமும் இருப்பதால் அதற்கு தடை விதிப்பதாக டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கோவா உள்பட பல மாநில அரசுகளும் அறிவித்தன.
அதையடுத்து, சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸ் பொட்டலங்களைத் திரும்பப் பெறுவதாக நெஸ்லே நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.