கோலாலம்பூர், ஜூன் 14 – உலகம் முழுவதும் ஆங்கிலப் பட இரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “ஜூராசிக் வோர்ல்ட்”.
“கதை, திரைக்கதை வசனம்” தமிழ்ப் படத்தில் தம்பி ராமையா ஒரு வசனம் பேசுவார்: “இதுவரை யாரும் பார்க்காத, இல்லாத ஒரு மிருகத்தை வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாரே” என்று அந்த வசனம் வரும்.
அதே வரிசையில், முன்பு ஜூராசிக் பார்க் என்ற பெயரில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் முதல் படத்தை எடுத்து இரசிகர்களைக் குதூகலத்தில் ஆழ்த்திய பின்னர், மேலும் இரண்டு படங்கள் வெளிவந்தன. இப்போது நான்காவதாக, அதே பின்னணியில் வெளிவந்திருக்கும் படம் ஜூராசிக் வோர்ல்ட்.
ஆனால், முதல் படத்திற்குப் பின்னர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எந்தப் படத்தையும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கதை என்ன?
ஆங்கிலப் படத்திற்குக் கதை முக்கிமா? எதுவாக இருந்தாலும் சம்பவங்களை வைத்து நகர்த்தி விடுவார்கள் என்பதை இதிலும் நிரூபித்திருக்கின்றார்கள். மத்திய அமெரிக்க தீவு ஒன்றில், ஜூராசிக் வோர்ல்ட் என்ற பெயரில் மரபணு மாற்று முறையில் விதம் விதமாக உருவாக்கப்பட்ட டைனோசரஸ் இன மிருகங்களை வைத்துக் காட்சி நடத்துகின்றார்கள்.
அதற்காக, ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் அந்த பூங்காவில் திரண்டு விடுகின்றார்கள். இதில் இரண்டு சிறுவர் சகோதரர்களும் அடக்கம். அவர்களின் தாயார் தனது சகோதரி அந்தப் பூங்காவில் வேலை செய்கின்றார் என்ற காரணத்தினால் தைரியமாக சிறுவர்களைத் தனியாக அனுப்பி வைக்கின்றார்கள்.
இன்னொரு புறத்தில் அந்தப் பூங்காவின் விஞ்ஞானக் கூடத்தில் புதிய பிரம்மாண்டமான டைரோசரஸ் மிருகம் ஒன்றை உருவாக்கி இரகசியமாக வளர்த்து வருகின்றார்கள். இரசிகர்களுக்கு அடிக்கடி மாற்று மிருகங்களையும் புதுமைகளையும் புகுத்தினால்தான் கூட்டம் வரும் என்பது பூங்கா உரிமையாளர்களின் திட்டம்.
பூங்கா உரிமையாளராக வருபவர் பிரபல இந்தி நடிகர் இர்பான் கான்.
ஜூராசிக் வோர்ல்ட் பூங்கா உரிமையாளராக நடித்திருக்கும் இந்தி நடிகர் இர்பான் கான்
விஞ்ஞானக் கூடத்திற்குள்ளும் வில்லன் குழு ஒன்றும் பூங்காவுக்கு வெளியே இருக்கும் எதிரிக் குழு ஒன்றுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றது.
பூங்காவின் மேற்பார்வையாளராக வருபவர் கதாநாயகன். அவருக்கும் பூங்காவின் நிர்வாகி பெண்ணுக்கும் (மேலே குறிப்பிட்ட சிறுவர்களின் சித்தி) இடையே கொஞ்சம் ஊடலோடு கூடிய காதல்.
கதாநாயகன் நான்கு வெலோசிரெப்டஸ் ரக டைரோசரஸ்களைக் கூண்டுக்குள் வைத்துப் பழக்கி வளர்த்து வருகின்றார்.
இதற்கிடையில் மாபெரும் குளம் ஒன்றில் பூங்காவுக்கு வரும் இரசிகர்களை டோல்பின் மீன்கள் பாணியில் மகிழ்விப்பதற்காக மற்றொரு பெரிய டைரோசரஸ் ஒன்றும் நீருக்குள் வளர்க்கப்படுகின்றது.
இந்தப் பின்னணியில், புதிதாக மரபணு திரிப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட டைரோசரஸ் தனது கூண்டிலிருந்து தப்பித்து வெளியேவந்து விட – தனியாக சிறுவர்கள் களேபரத்தில் சிக்கிக் கொள்ள – அவர்களைக் காப்பாற்ற கதாநாயகனும் சிறுவர்களும் சித்தியும் போராட – அதற்கப்புறம் நிகழும் பரபரப்பு, திகில், விறுவிறுப்பு கலந்த பயணம்தான் ஜூராசிக் வோர்ல்ட்.
தப்பித்த மிருகத்தைப் பிடிக்க கூண்டில் பழக்கப்பட்ட நான்கு வெலோசிரெப்டஸ் ரக டைனோசரஸ்களை திறந்து அவைகளுக்குள் நடக்கும் போராட்டம் இன்னொரு அதகளம்.
நவீன தொழில் நுட்பத்தில் கண்களுக்கு விருந்து
முதல் அரை மணி நேரம் எந்தவித பரபரப்புக் காட்சியும் இல்லாமல் செல்லும் படம் டைனோசரஸ் தப்பித்தவுடன் வேகமெடுக்கின்றது. காட்சிகளை இமைகொட்டாமல் பிரமிப்புடன் பார்க்க வைத்து விடுகின்றார்கள்.
இருப்பினும், முந்தைய படங்களின் அதே பாணி காட்சிகளை வைத்திருப்பதால் கொஞ்சம் ஏமாற்றம்தான். இயக்குநர் கோலின் டிரெவரோவ் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்திருக்கலாம்.
கார்களில் தப்பித்துச் செல்பவர்களை டைரோசரஸ் விரட்டும் காட்சிகளிலும், டைனோசரஸ் மிருகங்களுக்கிடையில் நடக்கும் சண்டைகளிலும் கூட பழைய ஜூராசிக் பார்க் படங்களைப் பார்ப்பது போன்ற ஒரு பிரமை.
படம் முழுக்க வியாபித்திருக்கும் இந்த ஒரே ஒரு குறையைத் தவிர, குழந்தைகளோடு, உல்லாசமாகப் பொழுது போக்க, உச்சகட்ட நவீன தொழில்நுட்ப உருவாக்கங்களை இரசிக்க, சிறந்த ஒரு படம் “ஜூராசிக் வோர்ல்ட்”
-இரா.முத்தரசன்