Home இந்தியா உயிரோடு இருந்த பல்லியைப் பயணிக்குச் ‘சிறப்பு உணவாக’ வழங்கிய ஏர் இந்தியா!

உயிரோடு இருந்த பல்லியைப் பயணிக்குச் ‘சிறப்பு உணவாக’ வழங்கிய ஏர் இந்தியா!

711
0
SHARE
Ad

airindializardfoodபுது டெல்லி, ஜூன் 14 – இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, பயணிக்கு வழங்கிய ‘சிறப்பு உணவில்’ (Special Meal) பல்லி ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 111 விமானத்தில் பயணி ஒருவர் மதிய உணவாகச் சிறப்பு உணவை விமானப் பணியாளரிடம் கேட்டு இருந்தார். குறித்த நேரத்தில் விமானப் பணியாளரும் பயணிக்கு உணவை அளித்து விட்டுச் சென்றுவிட்டார். உணவு இருந்த தட்டைப் பார்த்த பயணி அதிர்ச்சியில் உறைந்தார்.

அந்த உணவில் பர்கரின் அடியில் உயிருடன் பல்லி ஒன்று இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பயணி, தனக்கு வழங்கப்பட்ட ‘பல்லி விருந்து’ குறித்து ஏர் இந்தியா நிர்வாகத்திடம் உடனடியாக புகார் செய்தார். பயணி ஒருவரின் உணவில் பல்லி இருந்ததால் மற்ற பயணிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவைத் தொடவில்லை என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இது பற்றி விமான குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “ஏர் இந்தியா நிர்வாகத்திடம், உணவு குறித்துப் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் புகார் அளித்தோம். எனினும், இது குறித்து நிர்வாகம் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்தச் சம்பவத்தை ஏர்  இந்தியா நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. எந்த ஒரு பயணியும் உணவில் பல்லி விழுந்ததாக இதுவரை புகார் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

இது போன்ற சர்ச்சைகள் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒன்றும் புதிதல்ல, சில காலம் முன்னர் பயணி ஒருவருக்குக் கரப்பான் விழுந்த உணவை அளித்து ஏர் இந்தியா பரப்பை ஏற்படுத்தியது.

அதே சமயத்தில் புகார் தெரிவித்த பயணி இதுவரை எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இந்த விவகாரத்தை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.