Home நாடு “தமிழ் மலர்”  நாளிதழில் செல்லியல் செய்திகள் முன்அனுமதியின்றி மறுபதிப்பு

“தமிழ் மலர்”  நாளிதழில் செல்லியல் செய்திகள் முன்அனுமதியின்றி மறுபதிப்பு

2582
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 15 –  மலேசியாவில் இணையம் மற்றும் செல்பேசி குறுஞ்செயலி (mobile app) தளங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் செல்லியல் இணைய தளத்தின்  செய்திகளை அப்படியே அப்பட்டமாக நகலெடுத்து மலேசியாவில் அச்சு வடிவில் வெளிவரும் நாளிதழ்கள் அடிக்கடி தங்களின் சொந்தச் செய்திகள் போல் பதிப்பித்து வருகின்றன.

Tamil Malar Title

சில சமயங்களில் இது செல்லியல் செய்தி என்பதைக் குறிக்கும் வண்ணம் செய்திகளுக்குக் கீழே ‘செல்லியல்’ எனக் குறிப்பிடுவார்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் ஏதோ தங்களின் சொந்தத் தயாரிப்புச் செய்தி என்பது போல்நாங்கள் தயாரித்த செய்திகளைப் போட்டுக் கொள்கின்றார்கள்.

#TamilSchoolmychoice

இணையம், குறுஞ்செயலி வழி நாங்கள் வழங்கும் செய்திகள் அச்சு வடிவில் பத்திரிக்கைகளைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்கும் போய்ச் சேருகின்றதே என்ற நல்லெண்ணத்தில் நாங்களும் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை.

ஆனால், ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைப் பொறுப்பாளர்களை அழைத்து, இது நாங்கள் செல்லியலுக்கென பிரத்தியேகமாகத் தயாரித்த-எழுதிய செய்தி என்பதால், குறைந்த பட்சம் எங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று நட்பு அடிப்படையில் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கின்றோம்.

ஆனால், எங்களின் வேண்டுகோள் உதாசீனப்படுத்தப்படும்போது, அதை வாசகர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியது எங்களின் கடமையெனக் கருதுகின்றோம்.

உதாரணமாக, நேற்றைய ‘தமிழ் மலர்’ பத்திரிக்கையில் 2ஆம் பக்கத்தில் மட்டும் கீழ்க்காணும் மூன்று செய்திகள் அப்படியே செல்லியலில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டு, எங்களின் படங்களோடு, அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.

Tamil Malar news clip 1

எங்களின் மேற்கண்ட செய்தியை http://www.selliyal.com/?p=96796 என்ற இணைப்பில் காணலாம். அதில் காணப்படும் புகைப்படம் epa எனப்படும் செய்தி நிறுவனத்திடம் செல்லியல் நிர்வாகம் கட்டணம் செலுத்திப்  பெற்றதாகும்.  

ஆனால் எங்கேயும் எங்களின் ‘செல்லியல்’ பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே இதனை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டியது எங்களின் கடமையெனக் கருதுகின்றோம்.

மற்றொன்றையும் இங்கே வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். எங்களின் செய்திகள் எல்லாம் நாங்கள் சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தியுள்ள பணியாளர்களால் பிரத்தியேகமாகச் செல்லியலுக்கெனத் தயாரிக்கப்பட்டதாகும். நாங்கள் வெளியிடும் புகைப்படங்களையும் EPA எனப்படும் புகைப்படச் செய்தி நிறுவனத்திற்கு மாதா மாதம், கட்டணம் செலுத்தி நாங்கள் பெறுகின்றோம்.

Tamil Malar news clip 2

இந்தச் செய்தியை http://www.selliyal.com/?p=96741 என்ற இணைப்பில் செல்லியல் இணைய தளத்தில் காணலாம்.

Tamil Malar news clip 3 new

 மேற்கண்ட செய்தியைச் செல்லியலின் http://www.selliyal.com/?p=96721 இணைப்பில் காணலாம்.

ஆனால், எங்களின் செய்திகளை நாங்கள் வாசகர்களுக்கு இணையம் வழியாகவும், செல்பேசி குறுஞ்செயலிகள் (Mobile Apps) வழியாகவும் இலவசமாகவே வாசகர்களின் பயனீட்டுக்காக வழங்கி வருகின்றோம்.

ஆனால், தமிழ் நாளிதழ்களையோ – விலைக்கு விற்கின்றார்கள். ஆனால், நாங்கள் இலவசமாக வெளியிடும் எங்களின் செய்திகளை எங்களின் தயாரிப்பு என்று குறிப்பிடாமலேயே தங்களின் தயாரிப்புச் செய்தி என்பது போல் வெளியிட்டுக் கொள்கின்றார்கள்.

இந்த நியாயத்தையும் வாசகர்களின் தீர்ப்புக்கும், கருத்துக்கும் விட்டு விடுகின்றோம்.

-செல்லியல் ஆசிரியர்க் குழுவினர்

 முக்கியக் குறிப்பு: செல்லியலில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் செல்லியலின் பதிப்புரிமை பெற்றதாகும். இதனை நகலெடுத்து வெளியிடுவதற்கும், மறுபதிப்பு செய்வதற்கும் சட்டப்படி செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்பதை இந்தத் தருணத்தில் வலியுறுத்த விரும்புகின்றோம்.

அவ்வாறு செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறாமல் மறு பதிப்பு செய்வது மலேசிய த் தொடர்பு மற்றும் பல்ஊடகச் சட்டத்திற்கும், பதிப்புரிமைச் சட்டங்களுக்கும் முரணானது என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.