புதுடில்லி, ஜூன் 15 – கடந்த ஓராண்டு காலமாகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்து தஞ்சம் அடைந்த 4300 அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் வெறும் 1023 அகதிகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அடைக்கலம் தேடி இந்தியா வரும் வெளிநாட்டு இந்துக்களுக்கு மத்திய அரசு புகலிடம் அளிக்கும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையின்படி இந்தக் குடியுரிமை வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் முதலிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் அகதிகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குப் படிப்படியாகக் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது.