சென்னை, ஜூன் 17- கடலோரக் காவல்படை விமானம் காணாமல் போய் 9 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த விமானத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதிலிருந்த விமானிகள் சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, விமானப்படைத் தலைவர் வித்யாசாகர் ஆகியோரது கதி என்ன ஆனதென்றும் தெரியவில்லை.
இந்நிலையில், விமானத்தையும் விமானிகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரதமர் தலையிட்டு உதவ வேண்டுகிறோம் என்று விமானப்படைத் தலைவர் வித்யாசாகரின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாயமான விமானி சுபாஷ்சுரேஷ் ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரைச் சேர்ந்தவர். அவரது மனைவி தீபலட்சுமி நேற்று முன்தினம் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே மாயமான விமானத்தில் இருந்த மற்றொரு விமானி எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா மற்றும் விமானப் படைத்தலைவர் வித்யாசாகரின் மனைவி சுஷ்மா தவாலா ஆகியோரும் பிரதமருக்குச் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுஷ்மா தவாலா விடுத்துள்ள கோரிக்கையில், ‘‘நான் ஒரு இந்தியன்; கப்பல்படைத் துணைத் தலைவர் வித்யாசாகரின் மனைவி. காணாமல்போன இந்தியக் கடலோரக் காவல்படையின் டோர்னியர் விமானத்தில் சென்ற 3 விமானிகளில் என் கணவரும் ஒருவர்.
அந்த விமானம் காணாமல்போய் ஒரு வாரத்துக்கு மேல் ஆவதால் நானும், குடும்ப உறுப்பினர்களும் தூக்கமின்றியும், உதவியின்றியும் இருக்கிறோம். நமது ராணுவத்தின் மீது எங்களுக்கு மரியாதையும், நம்பிக்கையும் இருக்கிறது. அது வருங்காலத்திலும் தொடரும்.
இதுவரை எந்த ஒரு தகவலும் கண்டுபிடிக்க முடியாததால், நீங்கள் தனிப்பட்ட முறையிலும், மிகவும் தீவிரமான முறையிலும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எனது கணவரைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, விமானத்தைத் தேடும் பணியை மேலும் துரிதப்படுத்தி அவர்களை விரைவில் கண்டுபிடித்துக் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நாமும் வேண்டுவோமாக!