சென்னை, ஜூன் 19 – நடிகர் சங்கத்தில் திமுக குழப்பம் விளைவிப்பதாக சங்கத் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் சரத்குமார் கூறுகையில்; “நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் தி.மு.க.வில் இருக்கும் பூச்சி முருகன் வழக்கு தொடுத்திருக்கிறார்”.
“அதே திமுகவைச் சேர்ந்த நடிகர் சந்திரசேகர், நான் முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடுவதாக குற்றம்சாட்டுகிறார். அவர் யாருடைய தூண்டுதலில் இப்படி பேசுகிறார் என்று நானும் சொல்ல முடியும்”.
“இந்த பிரச்சினையில் திமுக பின்னணி இருக்கிறதா அல்லது தனிப்பட்ட நபர்களின் தூண்டுதல் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை”.
“ஆக மொத்தத்தில் நடிகர் சங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கு நான் அஞ்சப்போவதில்லை. எங்கள் அணிக்கு தோல்வி பயம் இல்லை. நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறுவது நிச்சயம்”.
“நடிகர் மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார். அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான்”.
“நாடகத்தில் இருந்துதான் சினிமா வந்தது. நாடக நடிகர்களை சினிமா துறையில் இருந்து பிரித்து பார்க்க முடியாது,” என்றார். நடிகர் சங்கத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் நாடக நடிகர்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.