புதுடில்லி, ஜூன் 22 – அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி திகார் சிறை மற்றும் சென்னை புழல் சிறையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 8 ஆயிரம் கைதிகள் கலந்து கொண்டு, யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறை எனப்பெயர் பெற்ற, டெல்லி திகார் சிறையில், கைதிகள் பங்கேற்கும் வகையில், யோகா தினத்தைக் கொண்டாட சிறைத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்படி நேற்று அங்கு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், பஞ்ரவதி யோகா ஆசிரமம் யோகா பயிற்சி அளிக்க, 8 ஆயிரம் கைதிகள் கலந்து கொண்டு, யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.
அதேபோல், யோகா தினத்தை முன்னிட்டு வாழும் கலை அமைப்புச் சார்பாகப் புழல் சிறையில் திறந்தவெளி அரங்கில் நேற்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறைத் தண்டனையில் உள்ள 250 கைதிகள், விசாரணையில் உள்ள 100 கைதிகள் என மொத்தம் 550 கைதிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த யோகாசனம் நடந்தது. இதில் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த யோகா நிபுணர்கள் பங்கேற்று கைதிகளுக்கு யோகாசனங்களைச் சொல்லிக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை அதிகாரி ராஜேந்திரன், கலை நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.