சீனாவில் சியாவுமிக்கு அடுத்ததாக மிகப் பெரிய வர்த்தகத்தைச் செய்து வரும் ஹவாய் நிறுவனம், திறன்பேசிகள், தட்டைக் கணினிகள் மற்றும் பேப்லட்கள் என அனைத்து ரக கருவிகளையும் தயாரித்து வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள ஹவாய் நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வரும் நிர்வாகி ஒருவர் தங்கள் நிறுவனம், நெக்சஸ் திறன்பேசிகளைத் தயாரித்து வருவதாக மறைமுக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அண்டிரொய்டு எம் இயங்குதளத்தில், ஸ்னாப்ட்ராகன் 810 பிராசசர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் உருவாகி வரும் இந்த திறன்பேசி கூகுள், ஹவாய் வர்த்தகத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
கூகுள்-ஹவாய் கூட்டு தயாரிப்பு உறுதியானால், அசுஸ், சாம்சுங் மற்றும் எச்டிசி நிறுவனங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெளி நிறுவனத்துடன் இணைந்து கூகுள் திறன்பேசிகளைத் தயாரிக்க இருக்கிறது. எனினும், இதுபற்றி இரு நிறுவனங்களும் இதுவரை எவ்விதக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.