சென்னை, ஜூன் 23 – இடைத்தேர்தலைப் பொதுத்தேர்தலின் முன்னோட்டமாகக் கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுகவை வெற்றிபெற முடியாது என்பதாலேயே, எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரும், அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதா நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
எம்.ஜி.ஆர். சிலை – அருகே பிரச்சாரத்தைத் தொடங்கிய அவருக்குச் சூரிய நாராயண செட்டி தெரு, காசிமேடு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு என வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலைச் சந்திப்பில் வாக்கு சேகரித்த ஜெயலலிதா, கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துரைத்த அவர், அரசியல் சதியால் சிறிதுகாலம் முதலமைச்சராக இல்லாத சூழல் ஏற்பட்டு இடைத்தேர்தலைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதிமுக-வை வெற்றிபெற முடியாது என்பதால்தான், முக்கியக் கட்சிகள் பலவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நினைத்து இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த இடைத்தேர்தல், இடையூறு செய்தவற்களுக்கு விடை கொடுக்கும் தேர்தல் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, எழில் நகர் வழியாகப் பயணித்த முதலமைச்சர் ஜெயலலிதா, வழிநெடுக நின்றிருந்த மக்களிடமும் வாக்கு சேகரித்தார்.