புதுடெல்லி, ஜூன் 23 – ஆப்கானிஸ்தானில் நேற்று நாடாளுமன்றத்தைக் குறி வைத்துத் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் டுவிட்டரில்,
“ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான மற்றும் கோழைத்தனமான செயலாகும். ஜனநாயகத்தில் இதுபோன்ற தாக்குதலுக்கு இடமே கிடையாது”.
“தாக்குதலில் காயமடைந்தவர்கள் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இந்த நேரத்தில், நாம் ஆப்கானிஸ்தான் மக்களின் தோளோடு தோளாக நிற்போம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார் மோடி.
இதே போன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ‘‘உலகம் முழுவதும் ஜனநாயகம் வலுப்பெற்று வரும் நிலையில் தீவிரவாதிகளின் இதுபோன்ற கோழைத்தனமான செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை” என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.