கோலாலம்பூர், ஜூன் 23 – மாஸ் நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் அடுத்த அதிரடியாகத் தனது தலைமைச் செயல்பாட்டு அதிகாரியை (COO) நியமனம் செய்துள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த பீட்டர் பெல்லேவ் தான் புதிய பொறுப்பிற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பணிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தொடங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ் நிறுவனத்திற்குப் பீட்டர் பெல்லேவ் புதியவராக இருந்தாலும், ஏர்லைன் செயல்பாடுகளில் அவர் சிறந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அயர்லாந்தின் மலிவு விலை விமான நிறுவனமான ‘ராயன்ஏர்’ (Ryanair)-ல் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதலில் தலைமைப் பொறுப்பினை வகித்த பீட்டர் அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி உள்ளார் என்று கூறப்படுகிறது.
பீட்டரின் நியமனம் தொடர்பாக மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பீட்டர் பெல்லேவ், மாஸின் 72 தரைத் தளங்களையும், 320 விமானங்களையும் நிர்வகிப்பார். இவரின் செயல்பாடுகள் மாஸின் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும்” என்று அறிவித்துள்ளது.
இரு பெரும் பேரிடர்களுக்குப் பிறகு, மாஸ் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கஸானா நிறுவனம், தலைமை நிர்வாகி மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆகிய இரு முக்கிய பொறுப்புகளுக்கும் வெளிநாட்டவர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.