Home நாடு மெல்பெர்ன் மோசடி:நாங்கள் அரசின் விதிமுறைகளைத் தான் பின்பற்றினோம் – மாரா தலைவர்!

மெல்பெர்ன் மோசடி:நாங்கள் அரசின் விதிமுறைகளைத் தான் பின்பற்றினோம் – மாரா தலைவர்!

862
0
SHARE
Ad

the ageகோலாலம்பூர், ஜூன் 24 – “மொனாஷ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான குடியிருப்பு வாங்கியதில் எவ்வித மோசடிகளும் நடைபெற வில்லை. அனைத்தும் நிதி அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி தான் நடந்தன. இது தொடர்பாக ‘தி ஏஜ்’ (The Age) பத்திரிக்கையின் குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமற்றது” என மாரா தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 115 மலேசிய மாணவர்களுக்காக மாரா, மெல்போர்னில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் வாங்கியது. இதில் பல மில்லியன் ரிங்கிட் மோசடி நடந்துள்ளதாக மெல்போர்னில் செயல்பட்டு வரும் ‘தி ஏஜ்’ பத்திரிக்கை குற்றம்சாட்டியது. மேலும், இந்த மோசடியில் மாராவின் முக்கிய அதிகாரிகள் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் உண்மையான விலையை விட சில மில்லியன் ரிங்கிட் அதிகமாக அரசிற்குக் கணக்குக் காட்டியதாகத் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக மாரா தலைவர் அனுவார் மூசா விளக்கம் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாரா மீது தி ஏஜ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டியது எங்கள் கடமை. அதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். மொனாஷ் மாணவர்களுக்கான மெல்பெர்ன் சொத்து ஒப்பந்தத்தில் எத்தகைய மோசடியும் நடைபெறவில்லை. நடைபெற்ற அனைத்துப் பேச்சுவார்த்தைகளும், பரிவர்த்தனைகளும் நிதி அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி தான் நடந்தன”

“தி ஏஜ் பத்திரிக்கை குறிப்பிடும் 13.8 மில்லியன் ரிங்கிட் அதிகப்படியான விலையேற்றம் பற்றியோ, இன்ன பிற பரிவர்த்தனைகள் பற்றியோ மாரா நிர்வாகத்திற்குத் தெரியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.