கோலாலம்பூர் – ‘ஹிண்ட்ராப் 2.0’ அமைப்பின் தலைவர் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள வழக்கறிஞர் பி.உதயகுமார் கடந்த திங்கட்கிழமை (மே 28) அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக்கான குழுவிடம் 25 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்தார்.
அதில் அவர் சமர்ப்பித்திருக்கும் ஒரு பரிந்துரை தற்போது பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
மலாய்க்கார மற்றும் பூமிபுத்ரா மாணவர்களுக்கு மட்டும் என இயங்கிக்கொண்டிருக்கும் மாரா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தை இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் திறந்து விட வேண்டுமென அந்தப் பரிந்துரையில் உதயகுமார் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
மலாய்ப் பத்திரிக்கைகளில் மாரா பல்கலைக் கழகம் மலாய்க்காரர்களுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என மலாய் பத்திரிக்கைகள் கட்டுரைகள் எழுதி வருகின்றன.
இதற்கிடையில் நேற்று வியாழக்கிழமை கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாரா பல்கலைக் கழகம் மற்ற இனத்தவர்களுக்கும் திறந்து விடப் படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“எங்களைப் பொறுத்தவரை வேதமூர்த்தி தலைமையிலான ஹிண்ட்ராப் இயக்கத்தை மட்டுமே அங்கீகரித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம். ஆனால் இந்தப் பரிந்துரையைச் சமர்ப்பித்தது ஹிண்ட்ராப் 2.0 எனக் கூறப்படுகிறது. எனவே அதைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை” என்று மஸ்லீ கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மாரா பல்கலைக் கழகத்தை மற்ற இனத்தவர்களுக்கும் திறந்து விடப்பட வேண்டும் என்ற பரிந்துரை மலாய் இனத்தினரிடையே பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.