கோலாலம்பூர் –மாரா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தை அனைத்து இனத்தினருக்கும் திறந்து விட வேண்டும் என விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளுக்கு பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் பதிலளித்துள்ளார்.
“அந்த பரிந்துரை தவறானதல்ல. ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல. காரணம் புதிய அரசாங்கத்தின் மீது மலாய்க்கார சமூகத்தினர் இன்னும் தயக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இதுபோன்ற பரிந்துரைகளை விவாதிப்பது எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்” என அன்வார் தெரிவித்துள்ளார்.
“மாறாக ஒவ்வொரு இனங்களுக்கிடையிலும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது. இதுபோன்ற விவாதங்கள் பின்னர் நடைபெறலாம். யாரும் கருத்து கூறுவதை நான் தவறென்று கூறமாட்டேன். ஆனால் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதற்குள்ளாக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவதும் அதனால் மலாய் இனத்தவர் தங்களின் கடந்த கால பயன்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுவதும் தவறான, எதிர்மறையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்” என்றும் அன்வார் மேலும் தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசைக்கு நேற்று வியாழக்கிழமை அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எனக்கு எது இப்போது முக்கியம் என்றால், அரசியல் சாசனத்தில் கண்டுள்ள பூமிபுத்ரா உரிமைகளையும், சலுகைகளையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரத்தில் மற்ற எல்லா இனங்களின் உரிமைகளையும் தற்காக்க வேண்டும் என்பதுதான்.
“மாரா தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் மீதான விவாதம் நடத்தப்படுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எல்லா இனங்களுக்கும் தங்களின் உரிமைகள் மீதான நடப்பு கொள்கைகள் விட்டுக் கொடுக்கப்படாது என்ற நம்பிக்கை வந்தவுடன் இதுபோன்ற விவாதங்களை ஏற்படுத்தலாம்” என்றும் அன்வார் தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.
‘ஹிண்ட்ராப் 2.0’ அமைப்பின் தலைவர் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள வழக்கறிஞர் பி.உதயகுமார் கடந்த திங்கட்கிழமை (மே 28) அரசு அமைப்புகளுக்கான மறுசீரமைப்புக்கான குழுவிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் மலாய்க்கார மற்றும் பூமிபுத்ரா மாணவர்களுக்கு மட்டும் என இயங்கிக்கொண்டிருக்கும் மாரா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தை இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட அனைத்து மலேசிய மாணவர்களுக்கும் திறந்து விட வேண்டுமென பரிந்துரை செய்திருக்கிறார்.