Home இந்தியா ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது!

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது!

444
0
SHARE
Ad

rkசென்னை, ஜூன் 25- சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் 27-ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும், இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூரிலிருந்து வந்து தங்கியிருந்தவர்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அமைச்சர்கள் உள்ளிட்ட வெளியூர்க்காரர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அங்குள்ள திருமண மண்டபங்கள், விடுதிகளில் யாரும் தங்கி இருக்கக்கூடாது என்பதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று யாரேனும் தங்கியுள்ளனரா என்று கண்காணித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியைச் சுற்றிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

துணை ராணுவத்தினரும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்,ஓட்டுப் பதிவையொட்டி இன்று மாலை 5 மணி முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படுகின்றன. 27–ந்தேதி நள்ளிரவு வரை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:–

இன்று மாலை 5 மணிக்கு மேல் எவரும் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் போன்றவற்றை நடத்தக்கூடாது.

தேர்தல் தொடர்பான எவ்விதமான விளம்பரங்களும், எவ்விதமான ஊடகம் வழியேயும் மேற்கொள்ளக்கூடாது.

தேர்தல் தொடர்பான எவ்வித இசை விழா, திரையரங்க வெளியீடுகள் மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இவற்றை மீறினால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கத்தக்கதாகும்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட அனைத்து வாகன அனுமதிகளும் இன்று மாலை 5 மணிக்குக் காலாவதி ஆகி விடும்.

தேர்தல் தினத்தன்று வேட்பாளர், அவரது முகவர் மற்றும் தொண்டர்களுக்கு என மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற உரிமையுண்டு.

வேட்பாளர்களோ அல்லது அவரது முகவர்களோ வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 133ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால் அதனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தங்களது தற்காலிக சாவடிகளை வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் அமைக்கவும், தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறும் கோரப்படுகிறது.

மேற்படி சாவடிகளில் அப்பகுதியைச் சார்ந்த குற்றப் பின்னணி இல்லாத நபர் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும், அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும், அச்சாவடியில் உணவுப் பதார்த்தங்கள் வழங்கிடக் கூடாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்குச் சென்னை ரிப்பன் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 18004257012 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.