காத்மாண்டு, ஜூன் 26 – கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு பல்வேறு நாடுகள் சேர்ந்து ரூ.22,238 கோடி நிதியுதவி அளிப்பதாக உறுதி செய்துள்ளன.
இதில் மிகவும் அதிகபட்சமாக இந்தியாவின் சார்பில் ரூ.6,354 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதில் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 23 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 5 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. நிவாரணப் பணிகளுக்காக அனைத்துலக உதவியை நேபாளம் கோரியது.
அதன்படி அனைத்துலக நன்கொடையாளர் கருத்தரங்கு நேற்று காத்மாண்டுவில் நடந்தது. நிவாரணப் பணிகளுக்கு ரூ.42,570 கோடி தேவைப்படும் என்று நேபாளம் கூறியது.
அதில் முதல் நாள் முடிவில் ரூ.22,238 கோடி நிதியுதவியை பல்வேறு நாடுகள் உறுதி செய்தன. இதில் மிகவும் அதிகபட்சமாக இந்தியாவின் சார்பில் ரூ.6,354 கோடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.