சென்னை, ஜூன்26- கொடைக்கானலிலிருந்து வரும் பிரியாணிக்கான கல்பாசியில் மெர்குரி எனப்படும் பாதரசம் கலந்திருக்க வாய்ப்புள்ளது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
“சுற்றுச் சூழல் மாசு காரணமாக அமெரிக்காவில் மூடப்பட்ட பாதரச, தெர்மாமீட்டர் ஆலையை யுனிவெர்சல் நிறுவனம் 1983-ல் கொடைக்கானலில் தொடங்கியது.
பின்பு, அங்கும் பிரச்சினை உருவானது. இந்த ஆலை இருந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள படிமங்களைச் சேகரித்துச் சோதித்ததில் அவற்றில் அளவுக்கு அதிகமான பாதரசக் கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், இந்த ஆலையின் அபாயம் கருதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2001-ல் இதனை மூட உத்தரவிட்டது.
மேலும், தற்போது இந்த ஆலை அருகில் இருக்கும் ஷோலோ காப்புக் காடுகளில் பாயும் ஓடையோரம் வளரும் கல்பாசி மாதிரிகளில் ஒரு கிலோவில் 53 மில்லி கிராம் பாதரசம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் கிடைக்கும் கல்பாசி தான் கறி மசாலாக்களிலும், பிரியாணி தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பாதரசத்தால் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிக்கப்படும்.பிறவிக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.எனவே, ஆலைப் பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவான ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
பிரியாணிப் பிரியர்களே! எச்சரிக்கையாக இருங்கள்!