Home இந்தியா பாதுகாப்பிற்குப் பேர் போன திகார் சிறையில் சுரங்கப்பாதை அமைத்துக் கைதிகள் தப்பினர்!

பாதுகாப்பிற்குப் பேர் போன திகார் சிறையில் சுரங்கப்பாதை அமைத்துக் கைதிகள் தப்பினர்!

433
0
SHARE
Ad

thikarபுதுடெல்லி, ஜூன் 30- தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறை, டெல்லி சாணக்கியபுரி பகுதியில் அமைந்த திகார் சிறையாகும். மேலும், இந்தச் சிறை பலத்த பாதுகாப்புக்குப் பேர் போனதாகும்.

24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் இங்கிருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்பிச் செல்ல முடியாது என்றும் கூறுவதுண்டு

இப்படிப்பட்ட பலத்த பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையில், சுரங்கப்பாதை அமைத்து இரண்டு கைதிகள் தப்பியோடியுள்ளது எல்லோரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

திகார் சிறையில் சிறை எண்.7–ல் கொள்ளை வழக்குகளில் கைதான பைசான் மற்றும் ஜாவித் என்ற 2 கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இருவரும் தாங்கள் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து ஓசையின்றி நழுவி, சிறை வளாகத்தின் எல்லைப் பகுதியாக இருக்கும் கட்டிடம் எண் 8க்குச் சென்றனர்.

சுற்றுச்சுவரின் அடிப்பகுதியில் வேகவேகமாகச் சுரங்கப்பாதை அமைத்து, அதன் வழியாக வெளியேறி, அங்கிருந்த பாதாளச் சாக்கடைக்குள் புகுந்து தப்பிச் சென்று விட்டனர்.

மறுநாள் காலை வழக்கம்போல் சிறை அதிகாரிகள் கைதிகளைக் கணக்கெடுத்த போதுதான் கொள்ளையர்கள் இருவரும் தப்பிச்சென்ற விவரம் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

‘புறம்போக்கு’ படத்தில் வருவது போல், பலத்த பாதுகாப்பையும் மீறி, அவர்கள் தப்பிச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தனை காவலர்களின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டுச் சுரங்கப்பாதை அமைத்துத் தப்பிச் செல்ல அவர்களால் எப்படி முடிந்தது? சிறைக்குள் யாரேனும் அவர்களுக்கு உதவினார்களா?

இந்தச் சம்பவம் சிறைப் பாதுகாப்பிற்கே கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி தென்மேற்கு மாவட்ட ஆளுநர் ஆங்குர் கார்க், விசாரணை நடத்தி வருகிறார்.