பெய்ஜிங், ஜூன் 30 – உலக அதிசயங்களில் ஒன்றாகச் சீனப் பெருஞ்சுவர் திகழ்கிறது. இது கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் மிங் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டது. 1368–1644–ஆம் ஆண்டுகளில் மிங் பேரரசால் 6,300 கி.மீட்டர் தூரம் சுவர் கட்டப்பட்டது.
தற்போது அதன் நீளம் 13,170 கி.மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா.வின் ‘யுனெஸ்கோ’ நிறுவனம் உலகப் பராம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. சீனப் பெருஞ்சுவர் தொடர்ச்சியாகக் கட்டப்படவில்லை. துண்டு துண்டாகவே தான் உள்ளது.
கிழக்குக் கடற்கரையான ஷாங்கைகுயானில் இருந்து கோபி பாலைவனமான ஜியாயுகுயான் வரை கட்டப்பட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பெருஞ்சுவர் 21 ஆயிரம் கி.மீட்டர் தூரம் இருந்துள்ளது.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மழை, காற்று போன்ற பேரழிவுகளால் அவற்றின் பெரும்பகுதி அழிந்து விட்டது. சுவரில் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்ததாலும் சேதம் அடைந்து சுவர் இடிந்துள்ளது.
மேலும், லுலாங் பகுதியில் உள்ள ஹெபி என்ற இடத்தில் ஏழைக் கிராமவாசிகள் வீடுகட்ட சீன பெருஞ்சுவரை இடித்துச் செங்கற்கள் மற்றும் கற்களைத் திருடிச் சென்றனர்.
அதனாலும் அச்சுவரின் பெரும் பகுதி இடிந்து தரை மட்டமானது. மேலும், அப்பகுதி மக்கள் சுற்றுலாப் பயணிகளிடம் சீனப் பெருஞ்சுவரில் உள்ள செங்கற்களை எடுத்து அவற்றை நினைவுச் சின்னங்களாக விற்றுப் பணம் சம்பாதிக்கின்றனர்.
இதுபோன்ற காரணங்களால் சீனப் பெருஞ்சுவரின் 30 சதவீதம் பகுதிகள் இடிந்து அழிந்து விட்டன. எனவே எஞ்சியிருக்கும் பகுதியைக் காப்பாற்ற சீன அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் யுனான் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து நடைமுறைப் படுத்தியுள்ளது சீன அரசு.