கராச்சி, ஜூன் 11 – கராச்சி விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளது.
தாக்குதல் நேரத்தில் காணாமல் போன மேலும் 7 பேரின் சடலங்கள் விமான நிலைய வளாகத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை இந்த பயங்கரவாதத் தாக்குதலில் மாண்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களின் தாக்குதல் தொடுத்த 10 பயங்கரவாதிகளும் அடங்குவர்.
கராச்சி பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரம் என்பதோடு, சிந்து மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.
தாக்குதலுக்குப் பின்னர் கராச்சி விமான நிலையத்தின் நேற்றைய தோற்றம்
நேற்று கண்டெடுக்கப்பட்ட ஏழு சடலங்களும், ஒரு தனியார் சரக்கு நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரே ஒரு விமான நிலைய ஊழியர் மட்டுமே இந்த தாக்குதலில் இதுவரை காணாமல் போனவராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 19 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களின் 11 பேர் விமான நிலைய காவல் படையைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் இருவர் திங்கட்கிழமை இரவு மரணமடைந்தனர்.
விமான நிலையத்தை மீண்டும் கைப்பற்ற பாகிஸ்தான் இராணுவம் ஏறத்தாழ 5 மணி நேரம் போராட வேண்டியிருந்தது.
இந்த தாக்குதலில் சில விமானங்களும் சேதமடைந்தன.
தாக்குதல் நடந்து ஏறத்தாழ 15 மணி நேரம் கழித்து விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் வழக்க நிலைமைக்குத் திரும்பியது.