ஆனைக்கல், பிப்ரவரி 13 – ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் இன்று காலை தடம் புரண்டதில் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கர்நாடகாவின் ஆனைக்கல் என்ற இடத்தில் இன்று காலை 7.48 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் ஆனைக்கல் பகுதியைக் கடக்கும் போது திடீரென்று D-8, D-9 உட்பட நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் படுகாயமடைந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
சம்பவ இடத்துக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் இரு மாநிலங்களில் இருந்தும் வாகனங்களும் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளன.
அரக்கோணம் மற்றும் பெங்களூரில் இருந்து தேசிய பேரிடம் மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். D-9 பெட்டிதான் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது எனவும்,
பயணிகள் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதால் அதிக அளவு உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ரயில் தடம் புரண்டதற்கு என்ஜினில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்த பாறாங்கல்லில் ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா ஒன் இந்தியா செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.