புத்ரா ஜெயா – அரசியல் நன்கொடையாக வந்த 2.6 பில்லியன் ரிங்கிட்டில், பயன்படுத்தியது போக மீதி 2.03 பில்லியன் ரிங்கிட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திருப்பியளித்துவிட்டதாக சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நிறைவடைந்த அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது ஆகஸ்ட் 2013 -ல், சவுதியைச் சேர்ந்த அரச குடும்பத்திடம் பிரதமர் நஜிப், 2.03 பில்லியன் ரிங்கிட்டை (620 மில்லியன் டாலர்) திரும்ப செலுத்திவிட்டார் என்றும் அபாண்டி அலி இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 22 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் சவுதி அரச குடும்பம், பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அரசியல் நன்கொடை அளித்ததற்கான ஆவணங்களை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தன்னிடம் சமர்ப்பித்தது என்றும், அந்த ஆவணங்கள் தனக்கு திருப்தியளிப்பதாகவும் அபாண்டி குறிப்பிட்டுள்ளார்.