புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வீட்டுக் காவல் வழங்கப்படலாமா என்பதில் இருவிதக் கருத்துகள் இருக்கலாம். தவறில்லை. ஆனால், எஞ்சிய சிறைத் தண்டனையை அவர் வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்ற மாமன்னரின துணை உத்தரவு கடந்த ஓராண்டாக செயல்படுத்தப்படாமல், முடக்கப்பட்டு இருந்தது நஜிப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தோன்றுகிறது.
இதற்குக் காரணம் யார்? அந்த உத்தரவு செயல்படுத்தபடாமல் நீதிமன்றம் வரை வழக்காக இந்தப் பிரச்சனை கடந்த ஓராண்டாக இழுக்கடிக்கப்பட்டது ஏன்? யார் தவறு? பிரதமரா, அமைச்சரவையா, மன்னிப்பு வாரியமா, அல்லது மன்னிப்பு வாரியத்தை நிர்வகிக்கும் கூட்டரசுப் பிரதேச அமைச்சா?
எத்தனையோ முறை மறைமுகமாகவோ, நேரடியாகவோ, இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டாலும், அதுகுறித்து யாருமே வாய் திறக்கவில்லை.
இதைத்தான் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியும் சுட்டிக் காட்டியிருந்தார். மாமன்னரின் அத்தகைய உத்தரவு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து சட்டத்துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்) எந்தவித ஆவணத்தையும் சமர்ப்பிக்காதது குறித்து தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார் வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிபதி முகமட் பைருஸ்.
தன் எஞ்சிய சிறைவாச காலத்தை இனி வீட்டுக் காவலில் கழிக்கலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) தீர்ப்பளித்தது. ஆனால் இதற்கிடையில் மாமன்னரின் நஜிப் வீட்டுக் காவல் மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஓராண்டு காலம் கடந்து விட்டது. கடந்த ஜனவரி (2024) இறுதியில் மாமன்னர் நஜிப்புக்கு வீட்டுக் காவல் வழங்கும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
கடந்த திங்கட்கிழமை கூடிய 3 நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை என்ற நிலையில் நஜிப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது.
நீதிபதிகள் அசாஹாரி கமால் ரம்லி மற்றும் முகமட் பைருஸ் ஜாஃப்ரில் இருவரும் நஜிப்பின் எஞ்சிய தண்டனைக் காலத்தை அவர் முன்னாள் மாமன்னரின் உத்தரவுப்படி வீட்டுக் காவலில் கழிக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கினர். மாமன்னரின் அத்தகைய உத்தரவு எதுவும் இல்லை என சட்டத் துறை அலுவலகம் சத்தியபிரமாண ஆவணம் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
மற்றொரு நீதிபதியான அசிசா நவாவி நஜிப்பின் மேல்முறையீட்டை அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை வழங்கினார்.
நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க முடியுமா என்ற வழக்கு திங்கட்கிழமை (ஜனவரி 6) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அத்தகைய உத்தரவை வழங்கிய முன்னாள் மாமன்னர்- பகாங் ஆட்சியாளர் – சுல்தான் அப்துல்லாவின் அதிகாரபூர்வக் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய சிறைவாசத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்ற முன்னாள் மாமன்னரின் உத்தரவு அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் வீட்டுக்காவலில் அனுபவிக்கும் வண்ணம் இனி அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.முத்தரசன்