பாரிட் புந்தார் – செல்லியல் தகவல் ஊடக செய்திகளை தங்களின் செல்பேசிகளில் குறுஞ்செயலிகள் மூலமாகப் பதிவிறக்கம் செய்து படித்து வரும் வாசகர்களுக்கு – இதோ உங்களுக்காக இன்னும் ஒரு கூடுதல் வாசிப்பு அனுபவம்!
இருட்டாகவோ, வெளிச்சம் குறைவாகவோ உள்ள பகுதிகளில் நீங்கள் செல்பேசிகள் மூலம் செல்லியலைப் படிக்க விரும்பினால், அதற்காக உங்களுக்குத் தற்போது கூடுதலாக ஒரு வசதி செய்து தரப்பட்டுள்ளது.
செல்லியல் செய்தி ஒன்றை நீங்கள் படிக்க விரும்பும்போது, Night mode எனப்படும் ‘இரவு நிலை’ என்ற தேர்வை தேர்வு செய்து கொண்டால் செல்லியல் செய்திகளை இருட்டிலும் தெளிவாக – அதே சமயம் கண்களுக்குப் பாதிப்பில்லாமல் – படிக்கும் வண்ணம் உங்கள் செல்பேசியின் முகப்புத்திரை தானாகவே மாறிக் கொள்ளும்.
உதாரணமாக, இரவு நேரத்தில் படுக்கை விளக்குகளை அணைத்துவிட்டு, ஏதாவது செய்திகளைப் படிக்க விரும்பினால் கண்களுக்கு அழுத்தம் தராமல்-பாதிப்பில்லாமல் நீங்கள் செய்திகளை வாசிக்கலாம்.
முதல் கட்டமாக அண்டுரோய்டு பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்ற தளங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் செல்லியலின் தோற்றுநரும் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் அறிவித்துள்ளார்.
தமிழ்க் கணிமை நிகழ்ச்சியில் அறிவிப்பு
இன்று ஞாயிற்றுக்கிழமை பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெற்ற “தமிழ்க் கோட்டமும் தமிழ்க் கணிமையும்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே முத்து நெடுமாறன் இந்த விவரங்களை வெளியிட்டார்.
மலேசியாவில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் செல்பேசி குறுஞ்செயலியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே தகவல் ஊடகத் தளமான செல்லியல், உலகம் எங்கும் உள்ள வாசகர்களுக்கு, புதிய வாசிப்பு அனுபவங்களை குறுஞ்செயலி மூலம் தொடர்ந்து வழங்கி வருகின்றது. மற்ற தமிழ் குறுஞ்செயலிகளில் இல்லாத அளவுக்கு புதிய, நவீன அம்சங்களையும் புகுத்தி வருகின்றது.
தமிழ் வாழ்வியல் இயக்கம், “தமிழ்க் கோட்டம்” என்ற பெயரில் நிர்மாணிக்கவிருக்கும் 3 மாடிகள் கொண்ட கட்டிடத்திற்கு நிதி திரட்டும் வகையில் பாரிட் புந்தாரில் நடத்தப்பட்ட ‘தமிழ்க் கோட்டமும் தமிழ்க்கணிமையும்’ எனும் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய முத்து நெடுமாறன் அண்மையில் செல்லியல் குறுஞ்செயலியில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய, நவீன அம்சங்கள் குறித்து விளக்கங்களும் வழங்கினார்.
மேலும், கணினி தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்மொழி எந்த அளவுக்கு தனது ஆளுமையைப் பதித்துள்ளது, தமிழில் தகவல் தொழில்நுட்பம் அடைந்துள்ள ஆகக் கடைசியான வளர்ச்சிகள், தமிழ்மொழியின் எதிர்கால சவால்கள், புதிய திறன்கருவிகள், தட்டைக் கருவிகளில் தமிழ் மென்பொருளை நிறுவுதல் முதலான கோணங்களில் தனது கருத்துக்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே அவர் தெரிவித்தார்.